Friday, June 28, 2024

               கோம்பை

கோம்பை என்பதோர் ஊரின் பெயர்.ஊரின் பெயர் எனும்போது,அம்பாசமுத்திரம் அம்பை ஆகியது போல என்று எண்ணலாகாது.கோம்பை என்பதே முழுப்பெயர்தான்

   ஊர்களின் பெயர்களுக்குப் பெரும்பாலும் துல்லியமானதோர் வரலாறு சார்ந்த, பண்பாடு சார்ந்த காரணம் இருக்கும். அல்லது இடுகுறிப் பெயராக இருக்க வேண்டும். அதைச் சுருக்கி விளிக்கம் போது, பெயர் அதன் தன்மையை இழந்து, இளித்துக்கொண்டு நிற்பது அடாது. எடுத்துக்காட்டாக, சிராப்பள்ளி என்று பெயர் வரக்காரணம் உண்டு. அஃது திரு எனும் சிறப்பு அடைமொழி பெற்றுத் திருச்சிராப்பள்ளி ஆகியது. அதைத் திருச்சி என குறுக்கும்போது பொருளற்ற முண்டமாக நிற்பது அருவருப்பாக இல்லையா ? ஆனால் கோம்பை அவ்வாறல்ல.

        இந்திய தேசீய நாய்களில் ராஜபாளையமும்,கோம்பையும் பெயர் பெற்றவை. இடத்தின் பெயர் நாய்க்கும் ஆனது எனில் தமிழ் இலக்கணத்தின்படி அது இடஆகு பெயர்.

          கோம்பை என்பது ஊர்ப்பெயர் என்பது போல், நாய் இனத்தின் பெயர் என்பது போல், அஃதோர் ஆடவப் பெயரும் ஆகும். சாதி, இனப் பாகுபாடுகள் துறந்து அந்தப் பகுதி மக்கள் அப்பெயரை அணிந்து வாழ்ந்தனர்.

      இனி, உங்களில் சிலர், கோம்பை எங்கிருக்கிறது எனும் கேள்வி எழுப்புவது குறித்து: தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில் ,உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில்  ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.

        கோபம்,ஆத்திரம் வரும்போதும் இளக்காரமாகவும் " அவன் என்ன பெரிய கோம்பையா ?" என வினவுவதுண்டு. அது கோம்பை எனும் கோபம் மிகுந்த  நாயைக் குறித்தும் இருக்கலாம். கோம்பை எனும் பெயரில் ஒரு சித்தன் வாழ்ந்து சமாதி அடைந்த்தற்கு அடையாளமாக, ஈத்தாமொழி ராஜாமங்கலம் துறை கடற்கரையில் அமைந்துள்ளது (நாகர்கோவில்) அருகில் இன்றும் மக்கள் வழிபடும் (கோம்பேஸ்வரர் ஆலயம் )கோம்பைச்சாமி மடம் ஒன்றுள்ளது கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரையோரம். முழுநிலா அன்று கூட்டமாகக் கிடக்கும். ஆண்டில் ஒரு நாள் குருபூஜ உண்டு.விடுமுறை நாட்களில் வில்வண்டி ,சக்கடா வண்டி,கூட்டு வண்டி பூட்டிக் கொண்டு போய், கொல்லா மரக் காடுகளுக்கு ஊடாகப் போகும் வண்டித்தடத்தில் பைதாக்கள் மணலில் புதைய நகரந்து, தென்னந்தோப்பின் நடுவில் இருக்கும் கோம்பைச் சாமி மடத்தை அடைந்து, வண்டியை அவிழ்த்து, அடுப்புக் கூட்டி, விறகு தேடி, சுனையில் தண்ணீர்  கோரி, பொங்கிச்  சாப்பிட்டு வருவார்கள். கோம்பைச் சாமியின் மடத்தில் நின்றால் கடல் அலை அடிப்பது கேட்கும்.

        கோம்பைச் சாமியின் பெயரால் அந்தப் பக்கம் கோம்பை எனும் பெயர் அதிகமாக வழங்கி வந்திருக்கலாம்.

கோம்பை சுவாமிகள் பற்றி அரிய: 

https://www.maalaimalar.com/news/district/2022/02/23143519/3514771/Kanyakumari-News97th-Guru-poojai-of-Eethaamozhi-Shri.vpf


 

No comments:

Post a Comment